சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கீரோன் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் தொடர் மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த இருபது ஓவர் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து களம் இறங்கி கேப்டன் கோலி 4 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில், ஸ்ரேயாஸ் அய்யரும் ரிஷப் பந்தும் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது 5-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மற்றொரு முனையில் அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் ஒரு நாள் போட்டியில் தனது இரண்டாவது அரைசதத்தை அடித்தார்.
சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 70 ரன்களிலும், ரிஷப் பந்த் 71 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜாதவ் 40 ரனில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்த நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 287 ரன்கள் எடுத்தது.
288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்ப்ரீஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஷை ஹோப், ஹெட்மயர் ஆகியோர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினர். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 139 ரன்னில் ஆட்டமிழக்க, ஷை ஹோப் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகியோர் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற செய்தனர். ஹோப் 102 ரன்களும் பூரன் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹெட்மயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Discussion about this post