குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் அரசு பேருந்துகளும் வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இந்து, சமணம், பவுத்தம், சீக்கிய, பார்சி, கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் 6ஆண்டுகள் இந்தியாவில் குடியிருந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அசாம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தின் காரணமாகக் கொல்கத்தா, மால்டா உள்ளிட்ட பகுதிகளில் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தலைநகர் டெல்லிக்கும் போராட்டம் பரவியுள்ளது. டெல்லி பாரத் நகரில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அவ்வழியாகச் சென்ற வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்ததுடன் அரசு பேருந்துகளுக்கும் தீ வைத்தனர். இதில் 4 பேருந்துகள் முற்றிலும் எரிந்தன. இந்த நிலையில், இக்கலவரத்திற்கு ஆம் ஆத்மி கட்சிதான் காரணம் என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மறுத்துள்ளது.
இந்நிலையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவ மாணவிகள் கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென வன்முறையில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். காவல்துறையினர் அத்துமீறிப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Discussion about this post