புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவி ஒருவர், நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு சென்று பார்வையிட நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு சென்று வருவதற்கு தேவையான நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி, ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துவருகிறார். படிப்பில் அதிக நாட்டம் கொண்ட ஜெயலட்சுமி, தனது மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன், உறவினரின் அரவணைப்பில் உள்ளார். இந்நிலையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, தங்களுடைய ஆராய்ச்சி நிலையத்தை காண்பதற்காக நடத்திய இணையவழி தேர்வில், தமிழ்நாடு முழுவதும் தேர்வான 100 மாணவ, மாணவியரில் ஜெயலட்சுமியும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்கா சென்று வர தேவையான 50 சதவீத தொகையை, முன் பணமாக கட்டச் சொல்லி கேட்டுக் கொண்டதன் பேரில், ஒரு லட்சத்து 70ஆயிரம் ரூபாய் பணம் ஜெயலட்சுமிக்கு தேவைப்படுகிறது. எனவே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தனக்கு, தமிழக அரசும், கல்வித்துறை உயரதிகாரிகளும் தேவையான உதவியைச் செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Discussion about this post