இஸ்ரேல் நாட்டில் கடந்த 2 பொதுத் தேர்தல்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 12 மாதங்களுக்குள்ளாக மூன்றாவது பொதுத் தேர்தலும் நடைபெற உள்ளது. என்னதான் நடக்கிறது இஸ்ரேலில்?
இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியும், முன்னாள் ராணுவ தளபதியான பென்னி காண்ட்ஸ்-சின் புளூ அண்டு ஒயிட் கட்சியும் நேரடி போட்டியை சந்தித்தன. லிகுட் கட்சி அதிக இடங்களைப் பிடித்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்கள் அதனிடம் இல்லை. இதனால் கூட்டணி அமைத்து பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் அதிபரானார். ஆனால் சில மாதங்களில் அந்தக் கூட்டணி முறிந்ததால் அரசு கவிழ்ந்தது.
இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி மீண்டும் இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதிலும் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியும், முன்னாள் ராணுவ தளபதியான பென்னி காண்ட்ஸ்-சின் புளூ அண்டு ஒயிட் கட்சியும் மோதின.இந்தத் தேர்தலிலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எனவே, தனிப் பெரும் கட்சியாக இருந்த நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்பும் 28 நாள் அவகாசமும் வழங்கப்பட்டது, ஆனால் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் பிற கட்சிகளின் ஆதரவைத் திரட்ட முடியவில்லை. இதனால் பென்னி காண்ட்ஸ்-சின் புளூ அண்டு ஒயிட் கட்சிக்கு அடுத்து வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவராலும் குறித்த காலத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
இந்நிலையில், இந்த வாரம் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் ஆட்சியைக் கலைத்து அடுத்த ஆண்டு தேர்தலை நடத்த ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 94 ஓட்டுகள் பதிவாகின. எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. எனவே வெற்றிபெற்ற இந்த மசோதாவின்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இது 12 மாதங்களுக்குள் இஸ்ரேல் சந்திக்கும் 3ஆவது பொதுத் தேர்தலாக இருக்கும். இஸ்ரேலின் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதன்முறை. இஸ்ரேலின் இந்தத் தேர்தலிலாவது யாருக்காவது தனிப் பெரும்பான்மை கிடைக்குமா? – என்பது அரசியல் பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Discussion about this post