ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் முதல் எரிந்துவரும் காட்டுத் தீயால் கோலாக் கரடிகளின் சரணாலயம் முழுவதுமாக அழிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அழகான கோலாக் கரடிகள் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.
உலகின் மிக அதிக காட்டுத்தீ விபத்துகள் நடந்த ஆண்டாக வரலாற்றில் பதிவாகி உள்ளது 2019ஆம் ஆண்டு. இந்த ஆண்டில் அதிகாரபூர்வ தரவுகளின்படி மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த அமேசான் காட்டுத் தீ விபத்தில் 83 சதவிகித அமேசான் காடு அழிந்துவிட்ட நிலையில், பின்னர் அமெரிக்காவும் காட்டுத்தீக்கு ஆளானது. இவற்றின் தொடர்ச்சியாக இப்போது ஆஸ்திரேலியாவைப் பதம்பார்த்துக் கொண்டிருக்கிறது காட்டுத்தீ.
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் கடந்த மாதம் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டன. அந்தத் தீ விபத்துகளில் பல இன்னும் கூட கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.இந்த ஆஸ்திரேலிய காட்டுத் தீயால் இதுவரை 2.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், 150க்கும் மேற்பட்ட வீடுகள் ஆகியவை அழிந்ததோடு, 6 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் ஆயிரக் கணக்கான உயிரினங்களும் அழிந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டிருந்த கோலாக் கரடிகளுக்கான சரணாலயம் இந்தத் தீவிபத்தால் முழுதும் சேதமடைந்தது. இதில் வாழ்ந்த கோலாக் கரடிகளை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்கும் புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியாகி, காண்பவர்களைக் கலங்கச் செய்தன. கோலாக் கரடிகள் அமைதிக்கும் அழகுக்கும் பெயர் பெற்ற விலங்குகள் என்பதால் அவற்றின் அழிவு பலருக்கு கடும் துயரத்தை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலிய தீ விபத்துகளில் சரணாலயத்தில் வாழ்ந்த எத்தனைக் கோலாக் கரடிகள் உயிரிழந்தன? – என்று உலகெங்கும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கான பதில் தற்போது வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காட்டுத்தீ விபத்து குறித்து நடந்து வரும் விசாரணையின்போது சூழலியல் நிபுணர் ஒருவர், ’நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் கோலா கரடிகளின் வாழ்விடங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. சுமார் 2 ஆயிரம் கோலாக் கரடிகள் காட்டுத் தீயில் பலியாகி உள்ளன’ – என்று கூறி உள்ளார். இந்தத் தகவல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் மட்டுமின்றி, உலகம் முழுவதையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
Discussion about this post