தமிழகத்தில் நீதித்துறையை மேம்படுத்தும் வகையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், ஆயிரத்து 111 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
புதிய நீதிமன்றங்களை உருவாக்கவும், நீதிமன்ற கட்டடங்கள் அமைக்கவும், புதிய பணியிடங்களை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், நீதித்துறைக்கென 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 874 கோடி ரூபாயும், 2018 -19 ஆண்டில் 236 கோடி ரூபாயும் என மூன்று ஆண்டுகளில் மட்டும், ஆயிரத்து 111 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 223 புதிய நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என்ற, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, இதுவரை 217 புதிய நீதிமன்றங்கள் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இதில், 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, 176 புதிய நீதிமன்றங்களும் 2018-19 ஆண்டில் 41 புதிய நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான, குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களும், மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்க 34 நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டு, தமிழகத்தில் நீதித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 30 குடும்பநல நீதிமன்றங்களில், 23 நீதிமன்றங்கள் அதிமுக அரசால் உருவாக்கப்பட்டவை. இது தவிர ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 8 நீதிமன்றங்களில், 4 நீதிமன்றங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை.
மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மட்டும்தான் 32 மாவட்டங்களில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.தமிழகத்தில் இயங்கக்கூடிய 91 சதவீதத்திற்கும் அதிகமான நீதிமன்றங்கள், அரசு அல்லது சொந்தக் கட்டிடங்களிலேயே இயங்கி வருவது நீதித்துறையின் கூடுதல் சிறப்பம்சமாகும்.
Discussion about this post