நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை, இஸ்ரோவின் ஆர்பிட்டர் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் இரண்டு மூலம் விக்ரம் லேண்டரை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க முயன்ற போது திடீரென தகவல் தொடர்பை இழந்தது.
விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பை இஸ்ரோ விஞ்ஞானிகளால் மீட்டெடுக்க முடியவில்லை. இந்த நிலையில், நிலவில் மேற்பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தின் படங்களை நாசா நேற்று வெளியிட்டது. மதுரையை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் கொடுத்த தகவலால் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடித்ததாக குறிப்பிட்ட நாசா, அவருக்கு நன்றி தெரிவித்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன், இஸ்ரோவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டதாக விளக்கம் அளித்தார். ஆனால் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்பதை செப்டம்பர் 10ஆம் தேதி இஸ்ரோ இணையதளத்தில் தெரிவித்து விட்டதாக கூறினார்.
இதனிடையே, செப்டம்பர் 9ஆம் தேதியே, இந்த தகவல் இஸ்ரோவில் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post