30 வயதை கடந்த பிறகும் கூட நோக்கம் இல்லாமல் வாழ்வை கழிக்கும் பலரை அன்றாட வாழ்வில் பார்க்கிறோம். ஆனால் இந்தியர்களிடையே மத ரீதியான பிளவை ஏற்படுத்திய ஆங்கிலேயர்களை எதிர்த்து தூக்குமேடையைச் சந்தித்தான் ஒரு 18 வயது இளைஞனின் நினைவு தினம் இன்று. அவர்தான் வங்காளப் புரட்சியாளர், இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர்,ஆங்கியே அதிகாரி கிங்க்ஸ்போர்ட் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறிய குதிராம் போஸ்.
இந்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தை மட்டுப்படுத்துவதற்காக இந்தியர்களிடையே மத ரீதியான பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இன்றைய மேற்குவங்கம், வங்காள தேசம், பீகார், ஒரிசா, அசாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வங்க மாகாணத்தை இரண்டாக பிரித்தனர். ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதி மேற்கு வங்கம் என்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி கிழக்கு வங்கம் எனவும் பிரிக்கப்பட்டது. இந்த மத ரீதியான பிளவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. 18 வயதே நிரம்பிய குதிராம் போஸ் நண்பர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டான். ‘யுகாந்தர்’ என்ற புரட்சிக் குழுவில் இணைந்த அவர் காவல்நிலையங்களை குண்டு வீசித் தாக்கினார்.
பிரிவினைக்கு மூளையாகச் செயல்பட்ட கிங்க்ஸ்போர்ட் என்பவரைக் கொலை செய்ய திட்டமிட்டார். முசாபர்பூரில் இருந்த ஐரோப்பிய கிளப்பிற்கு வருகை தந்த கிங்க்ஸ்போர்ட் வாகனம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனால் அந்த வாகனத்தில் கிங்க்ஸ்போர்ட்டிற்கு பதிலாக வந்த அவரது மனைவியும் குழந்தையும் பலியாகினர். இதை சற்றும் எதிர்பாராத குதிராம் போஸ் மிகவுக் வருந்தினார். ஆங்கிலேய காவல்துறையினரிடம் சரணடைந்த அவர் குண்டு வீச்சில் அப்பாவிகள் பலியானதற்கு வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் குதிராம் போசுக்கு ஆங்கிலேய அரசு மரண தண்டனை விதித்தது. 1908, ஆகஸ்ட் 11 ம் தேதி குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார்.
அந்த மாவீரன் எரிக்கப்பட்ட சாம்பலை பாலில் கலந்து வங்கத் தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுத்தார்களாம் . இந்தியர்களின் கடுமையான எதிர்ப்பினால் வங்கப் பிரிவினை 1911ல் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் ஆங்கிலேயர்கள் அன்று விதைத்த விஷ விதைகள் விருட்சமாக வளர்ந்தன. பிற்காலத்தில் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக விளங்கிய இயக்கங்கள் அனைத்தும் வங்கப் பிரிவினையின் போது உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. சாதி மத அடையாளங்களைத் தாண்டி இந்தியர் என்ற உணர்வை வளர்த்ததில் குதிராம் போஸ் போன்ற புரட்சியாளர்களின் பங்கு இன்றியமையாதது.
Discussion about this post