விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர் சண்முக சுப்பிரமணியனுக்கு நாசா விஞ்ஞானிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் இரண்டு மூலம் விக்ரம் லேண்டரை விண்ணுக்கு அனுப்பினர். அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்ட விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு தகவல் தொடர்பை இழந்தது. இதனால் விக்ரம் லேண்டரின் கதி என்ன என்று தெரியாமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர். தரையிறங்கும் போது நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதி பாகங்கள் உடைந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இருப்பினும் மர்மம் நீடித்த நிலையில், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் களமிறங்கினர். இதனிடையே, நிலவின் மேல் பகுதியில் விக்ரம் லேண்டர் உள்ள இடத்தின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அத்துடன் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர் சண்முக சுப்பிரமணியனுக்கு நாசா விஞ்ஞானிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தொடக்கத்தில் நாசாவின் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், சண்முக சுப்பிரமணியனின் மின்னஞ்சல் மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாசா விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளனர்.
Discussion about this post