ஃபேஸ்புக் மூலமாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த தேனியை சேர்ந்த காதலனை, கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மலேசிய பெண்
தேனி மாவட்டம் போடியில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி தெருவில் வசித்து வரும் அசோக் குமார், ஃபேஸ்புக் மூலமாக மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரியை காதலித்து வந்ததாக தெரிகிறது. அசோக்குமாரை சந்திப்பதற்காக தேனி வந்த அமுதேஸ்வரியை கண்ட அசோக் அதிர்ச்சியடைந்தார். காரணம் அமுதேஸ்வரிக்கு 45 வயது இருக்கும். முகநூலில் அமுதேஸ்வரி பதிவிட்ட புகைப்படத்திற்கும் நிஜ உருவத்திற்கும் தொடர்பே இல்லாமல் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அசோக் குமார் வயதை குறைத்து காண்பித்து தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அமுதேஸ்வரியை திட்டி அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து மலேசியா சென்ற அமுதேஸ்வரி அசோக்குமரை பலி வாங்க எண்ணி மீண்டும் அசோக்கை தொடர்ப்பு கொண்டு அமுதேஸ்வரி இறந்து விட்டதாகவும், தான் அவரது அக்கா எனக் கூறி தேனியில் தன்னை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி அவர் கூறிய விடுதியில் சென்று பார்த்த போது அங்கு அமுதேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லையெனில் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றும் அசோக்குமரை மிரட்டியதாக தெரிகிறது. இந்தநிலையில், அசோக் குமார் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, இருவரையும் அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். விசாரணையில் அமுதேஸ்வரியின் உண்மையான பெயர் விக்னேஷ்வரி என்பதும் தெரியவந்தது.
திருமணத்திற்கு அசோக்குமாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்காததால், ஆத்திரமடைந்த அமுதேஸ்வரி, காவல்நிலையத்தில் அசோக்குமார் மீது புகார் கொடுத்து விட்டு மலேசியா சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்த 9 பேரும் அமுதேஸ்வரியின் முகநூல் நண்பர்கள் என்பதும், அமுதேஸ்வரி அசோக்குமாரை கொலை செய்ய அவர்களை கூலிப்படையாக ஏவியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனடிப்படையில் அமுதேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…..
Discussion about this post