நவீன மயமாக்கப்பட்ட பிர்லா கோளரங்கத்தை பள்ளி மாணவர்கள் ஆர்வமுடனும், ஆச்சரியத்துடனும் கண்டு களித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆனது சென்னை கிண்டியில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தை நிறுவியுள்ளது. இதில் உள்ள அரைக்கோள வடிவ கூரை கொண்ட வானவியல் அரங்கமே கோளரங்கம் ஆகும்.இரவு நேரத்தில் வானம் எப்படி இருக்கும் என வானின் அனைத்து நகர்வுகளையும், தொடர்புகளையும் விளக்கும் வகையில் இக்கோளரங்கம் அமைந்துள்ளது.
பி.எம். பிர்லா கோளரங்கமானது கடந்த 1988 மே 11 முதல் இயந்திர ஒளிப்பட கருவி மற்றும் நழுவு ஒளிப்படக் கருவிகளுடன் செயலாற்றி வந்த நிலையில் தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப இந்த கோளரங்கமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய உயர் தொழில்நுட்பம் கொண்ட ஒன்றிணைந்த எண்ணிலக்க கோளரங்கம் புத்தம் புதிய அரைக் கோள விதானத்துடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 12 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட இந்த ஒன்றிணைந்த எண்ணிலக்க கோளரங்கம் மற்றும் கோலத்தில் அறிவியல் அரங்கத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 19ம் தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார்.
நவீன எண்ணிலக்க திரைப்பட கருவிகளை இணைத்து துல்லியமான வண்ணப் படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றின் மூலம் விண்ணில் உள்ள பல லட்சம் விண்மீன்கள், சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள், நெபுலாக்கள், அண்டங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை வெறும் காட்சிகளாக பார்ப்போது போல் இல்லாமல் முப்பரிமாண முறையில் விண்ணுலகிற்கு நேரில் அழைத்துச் செல்வதைப் போன்ற அனுபவம், பின்னணி குரல் விளக்கத்துடன் அளிக்கப்படுவது மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துக்கிறது.
இங்குள்ள “கோளத்தில் அறிவியல்” கருவி அமெரிக்க தேசிய கடலாய்வு மற்றும் வானியல் நிறுவனம் உருவாக்கிய கோளவடிவ திரையீடு கருவியாகும். இதன் மூலம் பேரண்டத்தையே நம் கண் முன் கொண்டு வருவது மட்டுமல்லாமல் விவசாயம், வானிலை மாற்றங்கள், விமானங்களின் நகர்வுகள், பூகம்பம், எரிமலை வெடிப்பு, வறட்சி, கடல்மட்டம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் பற்றிய விளக்கத்தை கண்டு ரசிக்கலாம்.
நவீன மயமாக்கப்பட்ட கோளரங்கத்தை வாரத்தின் 7 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குறைவான கட்டணத்தை செலுத்தி பார்வையிடலாம் எனவும் சென்னைக்கு சுற்றுலா வரும் மாணவர்களை ஆசிரியர்கள் இங்கு அழைத்து வர வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
வான்வெளி அறிவியலை புத்தகத்தில் நிழற்படமாக பார்த்து தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், வானத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு அறிந்துகொள்வதை போல் நவீனபடுத்தப்பட்டுள்ள இக்கோளரங்கம் மாணவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்துள்ளது.
Discussion about this post