தமிழகத்தின் புதிய மாவட்டமாக உதயமாகவுள்ள எழில் கொஞ்சும் திருப்பத்தூரைப் பற்றிய சுவாரசியாமான தகவல்கள் மற்றும் அதன் சிறப்பு தொகுப்பு
நகரைச் சுற்றிலும் 10 சிவ ஆலயங்கள் இருப்பதால் திருப்புத்தூர் எனப் பெயரிடப்பட்டு காலப்போக்கில் திருப்பத்தூர் என மருவியதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தின் மேற்கு கடைக் கோடியில் அமைந்துள்ள இந்த நகரத்தை சுற்றி ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, விவசாய தோட்டங்கள் என எழில் கொஞ்சும் அழகாய் காட்சியளிக்கிறது. சந்தன மாநகரம் என அனைவராலும் அழைக்கப்படும் திருப்பத்தூர் நகரம் தனது 228-வது ஆண்டில் கம்பீரமாய் புதிய மாவட்டமாக அடி எடுத்து வைக்கிறது.
நிர்வாக வசதிகளுக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து திருப்பத்தூரை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் உதயமாகிறது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர், புதிய மாவட்டமாக உதயமாகிறது.
முதலமைச்சரின் இத்தகைய சீரிய நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆங்கிலேயர் காலத்திலேயே மாவட்டமாக இருந்த திருப்பத்தூர்,1792ம் ஆண்டு சேலம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதுடன் சேலத்தின் தலைநகராகவும் இருந்தது.
அதையடுத்து 1803-ம் ஆண்டு திருப்பத்தூர் வட ஆற்காடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தமிழகத்தின் நீராதாரம் பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையை நம்பியே இருக்கும் நிலையில், திருப்பத்தூரில் தென் மேற்கு பருவமழையே பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது.
வேலூரை வெயிலூர் என்று அழைப்பதற்கு காரணம் அப்பகுதியில் அதிகளவு வெயிலின் தாக்கம் இருக்கும். அப்படிப்பட்ட மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூரில் மாறாக ஆண்டுக்கு 8 மாதங்கள் இதமான சூழலே நிலவும். காரணம் திருப்பத்தூரை அரணாக பாவிக்கும் ஜவ்வாது மலையின் எழிலும், ஏலகிரி மலையும் தான்.
ஆங்கிலேயர் காலத்தில் தனி மாவட்டமாக இருந்த திருப்பத்தூர், சுதந்திரத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் மீண்டும் மாவட்டமாக தனது 228-வது ஆண்டில் உருவெடுக்கவுள்ளது. ஆயிரத்து 797 புள்ளி ஒன்பது 2 சதுர கிலோ மீட்டர் மொத்தப் பரப்பளவு கொண்ட திருப்பத்தூரில், 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 மக்கள் தொகையை உள்ளடக்கிய புதிய திருப்பதூரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்டமாக திறந்து வைக்கவுள்ளார்.
Discussion about this post