இந்திய அரசமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்ட நாள், அரசமைப்புச் சட்ட நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்ற பிறகு ராஜேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்ட நாள் 1949 நவம்பர் 26 ஆகும். அரசமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 ஆம் நாளில் இருந்து நடைமுறைக்கு வந்தது. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் அரசமைப்புச் சட்ட நாளாகவும், அது நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு நாளாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நீதித்துறை தொடர்பான சட்டங்களை அமெரிக்காவைப் பின்பற்றியும் நாடாளுமன்றம் தொடர்பான சட்டங்கள் இங்கிலாந்து நாட்டு அரசியலமைப்பு
முறைப்படியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு எல்லா உரிமைகளும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்றும் வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தானில் தேர்தல் மூலம் ஜனநாயகம் இருந்தாலும், அது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல ஆண்டுகாலமாக காக்கிச்சட்டை ஆட்சியில்தான் பாகிஸ்தான் இருந்து வருகிறது.
நேபாளத்தில் மன்னராட்சி இருந்தது. பல கஷ்டங்களை அனுபவித்து ஒரு ஜனநாயக அடிப்படையில் இன்றைக்கு ஒரு அரசு அமைந்தாலும் மிகச் சிக்கலான சூழலில் அந்நாடு இருக்கிறது.
இத்தனை சூழ்நிலைகளுக்கு மத்தியில், இந்தியா மட்டும்தான் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஜனநாயக நாடாக உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தேர்தல், அந்தத் தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றங்களை உருவாக்கும் தனிமனிதனின் வாக்குரிமை, நாடாளுமன்றம், நீதித்துறை, செயலாக்கத்துறை, அமைச்சகங்கள் என அனைத்தும் செம்மையாக இயங்குவதற்கு அடிப்படையாக அரசமைப்புச் சட்டம்இருக்கிறது. என்றுமே இந்த அரசமைப்புச் சட்டம் நமக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமல்லாமல் வழிகாட்டியாகவும் இருக்கும்.
Discussion about this post