வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் விரைவில் நித்தியானந்தாவைப் பிடித்து விடுவோம் எனவும் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் பெங்களூர் ஆசிரமத்தில் இருந்த தனது பிள்ளைகளை அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்துக்கு நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். தனது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரிக் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார். இதன் அடிப்படையில் ஆசிரமத்துக்குக் காவல்துறையினர் சென்றபோது அந்தப் பிள்ளைகளை ஆசிரம நிர்வாகிகள் ஒப்படைக்கவில்லை. மாறாகப் பெற்றோருடன் செல்லப் பிள்ளைகள் விரும்பவில்லை என்றும் ஆசிரமத்திலேயே இருக்கவிரும்புவதாகவும் கூறிவிட்டனர். இதையடுத்து மூத்த பெண்ணான தத்துவப்பிரியா தான் மேற்கிந்தியத் தீவில் உள்ளதாகவும் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் முகநூல் வழியாகப் பேசினார். ஜனார்த்தன சர்மாவின் புகாரின்பேரில் நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு செய்த குஜராத் காவல்துறையினர் ஆசிரமத்தின் பெண் நிர்வாகிகள் இருவரைக் கைது செய்தனர். அத்துடன் ஜனார்த்தன சர்மாவின் இளைய மகளையும் மகனையும் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவருக்கு எதிரான சான்றுகளைத் திரட்டி வருவதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிந்து கைது செய்வதற்காக வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்புகொண்டு வருவதாகவும் அகமதாபாத் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post