நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவரை விசாரணைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இருந்த தனது மகள்கள் இருவரைத் தனக்குத் தெரிவிக்காமல் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்துக்கு நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். தனது மகள்களைக் கண்டுபிடித்துத் தரக்கோரிக் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார். இதன் அடிப்படையில் அங்குச் சென்று காவல்துறையினர் விசாரித்தபோது அந்தப் பெண்கள் அங்கு இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து மூத்த பெண் தான் மேற்கிந்தியத் தீவில் உள்ளதாகவும் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் முகநூலில் பேசினார். ஜனார்த்தன சர்மா அளித்த புகாரின்பேரில் அகமதாபாத் காவல்துறையினர் நித்தியானந்தா மீதும் ஆசிரம நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும், தேவைப்பட்டால் அவரை விசாரணைக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post