இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச பெற்றுள்ள வெற்றி, அந்நாட்டு அரசியல் மற்றும் இந்தியாவுடனான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்
இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றுள்ளார். இலங்கையின் இரும்பு மனிதர் என்று சிங்களர்களால் அழைக்கப்படும் இவர் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப்போரை முன்னின்று நடத்தியவர். இதனாலே இந்தத் தேர்தலில், தமிழர்கள் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணி சார்பில் தேர்தலைச் சந்தித்த சஜித் பிரேமதசாவுக்கு ஆதரவு அளித்திருந்தது. இலங்கை இறுதிப்போரின் வடு இன்னும் ஆறாத சூழலில், தமிழர்கள், சஜித் பிரேமதசாவுக்கு ஆதரவளித்துள்ளனர் எனக் கருத இடமுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் ஆதரவால், தமிழர்கள் அதிகம் வாழும் கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா தொகுதிகளில் பெரும்பான்மையான வாக்குகள் சஜித் பிரேமதசாவுக்கு கிடைத்துள்ளன.
கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு பெரும்பான்மை மக்களின் கோபம் சிறுபான்மையினருக்கு எதிராக திரும்பியுள்ளது. தேர்தல் களத்திலும் குண்டுவெடிப்பை மையமாக வைத்தே பிரசாரங்கள் நடைபெற்ற நிலையில், ராஜபட்ச வெற்றி பெறக் கூடாது என்பதில் சிறுபான்மையினரும் உறுதியாக இருந்தனர். எனினும் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் அனைத்து பகுதிகளிலும் கோத்தபய ராஜபட்சவுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதனால் சுமார் 52 சதவீத வாக்குகளைப் பெற்று ராஜபட்ச வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது சீனாவுடனான உறவை புதுப்பிக்க அனைத்துக் கட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ராஜபட்ச தெரிவித்துள்ளார். ஏற்கனவே இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்திலும் இலங்கையின் உள்கட்டமைப்பிலும் சீனா அதிக முதலீடுகளை செய்துள்ளது. கோத்தபய ராஜபட்சவின் வெற்றி சீனாவுடனான நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும். சீனாவின் நடமாட்டம் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
இலங்கை இறுதிகட்டப் போருக்கு பின்னர் அங்குள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் வீடுகள் கட்டிக் கொடுப்பது, பள்ளிகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் முயற்சியால் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜபட்ச வெற்றி இந்தியாவுக்கு சற்று பின்னடைவு என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கோத்தபய ராஜபட்சவை நண்பராக பாவிப்பதே அங்குள்ள தமிழருக்கும் இந்தியாவுக்கும் நன்மை பயக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதை உணர்ந்தே பிரதமர் மோடி கோத்தபய ராஜபட்சவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்வதே ஒரு சிறந்த தலைவரின் பண்பாக கருதப்படுகிறது. புதிய அதிபராகப் பொறுப்பேற்கும் ராஜபட்ச அந்தப் பணியைத் திறம்பட செய்தால் அனைத்து தரப்பினரும் அவரை போற்றுவார்கள் என்பது மறுப்பதற்கில்லை
Discussion about this post