வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 342 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட் செய்த வங்கதேச அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தது. 64 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் புஜாரா 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 2 வது பந்திலே டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து மயங்க் அகவால் – ரஹானே இணை சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். 4வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்த நிலையில், 86 ரன்களில் ரஹானே ஆட்டமிழந்தார். இந்நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய மயங்க் அகர்வால் 8 சிக்சர் 28 பவுண்டரிகளுடன் 243 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 493 ரன்கள் எடுத்திருந்த போது 2 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜடேஜா 60 ரன்களுடனும் உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் 343 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி வலுவான நிலையில், இன்று 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்க உள்ளது.
Discussion about this post