வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் நவீன விவசாய முறையால் பூச்சியினங்கள் அழிந்து வருவதாக ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
காடுகளை அழித்து அதிகப் பரப்பளவில் விவசாயம் செய்வதாலும், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவதாலும், பூச்சிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருவதாக நேச்சர் என்ற பத்திரிகையின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளது. பருவ நிலை மாற்றம் குறித்து சூழலியலாளர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதைப் பெரும்பாலான நாடுகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பசுமைப் புரட்சி என்ற பெயரில் அதிக அளவு வேதி உரங்களைப் பயன்படுத்துதல், மண்ணுக்குப் பொருந்தாத பயிர்களைப் பயிரிடுதல் போன்ற செயல்களால் தான் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் தான் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதாகவும் சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்..
பட்டாம் பூச்சிகள், ஊரும் பூச்சிகள் மற்றும் பறக்கும் பூச்சிகளின் வாழ்விடங்களைக் காப்பாற்ற இயற்கை முறையிலான விவாசயங்களுக்கு மாற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பிற ஆய்வுகளில் பூச்சிகள், தேனீக்களில் பல இனங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாகப் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் தான் பூச்சியினங்கள் அதிக அளவில் அழிவை நோக்கி சென்றுகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
பூச்சியினங்கள் ஒருபக்கம் அழியும் நிலையில், ஈக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தொற்று நோய் அபாயத்திற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புழு பூச்சிகளின் அழிவு என்பது சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய அழிவின் தொடக்கம் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
Discussion about this post