நெஞ்சு சளி சார்ந்த நிமோனியா என்னும் கொடிய நோய் குழந்தைகளின் இறப்பிலும் பெரும்பங்கு வகிக்கும் நிலையில், அப்படிப்பட்ட நிமோனியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 12 ஆம் தேதியை ‘நிமோனியா தினமாக’ உலக சுகாதார நிறுவனம் கடைபிடித்து வருகிறது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு நெஞ்சு சளி சார்ந்த நோயான நிமோனியா முதன்மையான காரணமாக உள்ளது. முதியவர்களின் இறப்பைப் பொருத்தவரை மாரடைப்பு, பக்கவாதத்திற்கு அடுத்தப்படியாக மூன்றாவது காரணமாக நெஞ்சு சளி சார்ந்த நோயான நிமோனியா உள்ளது.
நெஞ்சு சளி சார்ந்த நோய் பாதிப்பு எனப்படும் நிமோனியா நோய் பாதிப்பு, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான்களால் ஏற்படுகிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம். மேலும் சர்க்கரை நோய், புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கம், ஆஸ்துமா, உள்ளிட்ட நெஞ்சு சளி பிரச்சினை உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், பக்கவாதம் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநோயிற்கு அளிக்கப்படும் சில மருந்துகள் போன்றவற்றின் காரணமாகவும் இந்த நெஞ்சு சளி சார்ந்த நிமோனியா வருவதற்கு வாய்ப்புண்டு.
இருமல், சளியோடு சேர்ந்த இருமல், காய்ச்சல், உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம், மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
மார்பகப் பகுதியை எக்ஸ் ரே எடுத்து பரிசோதித்தல், ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றை பரிசோதிப்பதன் மூலம் இதனை உறுதிப்படுத்தலாம்.
நிமோனியாவை தடுப்பூசி மூலம் தடுக்க இயலும். ஐம்பது வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரேயொரு முறை நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதும். இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது. முதியவர்களுக்கு இத்தகைய தடுப்பூசி போட்டுக் கொள்வதால், அவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு வருவது தடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கும் தடுப்பூசி அட்டவணைப் படி நிமோனியா தடுப்பூசி போட்டுவிடுவது நல்லது.
சாதாரணமாக காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் கூட, அலட்சிய படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் குழந்தைகளை நிமோனியா போன்ற கடுமையான நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக உள்ளது.
Discussion about this post