பழனியில் முன்விரோதம் காரணமாக சாமியார் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இடும்பன் கோவில் அருகே வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சிவன்கோவில், அங்காளம்மன் மற்றும் மாசாணியம்மன் கோவில் ஆகியவை உள்ளது.
மேலும் இந்த கோவிலை நிர்வகித்து வந்த செல்லத்துரை என்பவரது சமாதியும் உள்ளது. கோவில்களை ஸ்ரீவில்லிப்புத்தூரை
சேர்ந்த மலர்கனிராஜா என்பவர் நிர்வாகம் செய்துவந்தார். மலர்கனி ராஜாவிற்கு விஜயா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
அதே கோவிலில் இன்னொரு பூசாரியாக தர்மராஜ் என்பவரும் இருந்து வந்துள்ளார். தர்மராஜ் மற்றும் மலர்க்கனி ராஜாவிற்கு முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் இன்றுகாலை மனைவி விஜயாவுடன் மலர்கனிராஜா தனது இருசக்கரவாகனத்தில் இடும்பன்மலை வாசல் அருகே வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த தர்மராஜ் இருவரையும் கீழே தள்ளிவிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் மலர்கனிராஜா
வயிற்றில் சராமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
படுகாயமடைந்து குடல்சரிந்து ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாமியார் மலர்கனிராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த பழனி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தப்பியோடிய தர்மராஜ் என்பவரை தேடிவருகின்றனர். பூசாரிகளுக்கு இடையே நடந்த மோதலில் சாமியார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Discussion about this post