மாநில அளவில் நடைபெற்ற கணித கண்காட்சியில், கடினமான கணித சூத்திரத்தை எளிய வடிவில் காட்சிப்படுத்திய அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், தென்னிந்திய அளவிலான கனித கண்காட்சிக்கு தேர்வாகி முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமுதா என்ற கணித ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். கணித பட்டதாரி ஆசிரியையான அமுதா, அண்மையில் மாநில அளவில் நடந்த கணித பாட கண்காட்சியில் கலந்து கொண்டார். சுமார் 187
படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டிருந்த இந்த கண்காட்சியில், பல்வேறு கடினமான கணிதத்திற்கு எளித சூத்திரங்களை காட்சிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்த ஆசிரியை அமுதா வெற்றி பெற்றதுடன் தென்னிந்திய அளவிலான கணித கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளார். அரசு பள்ளியிலும் திறமையான ஆசிரியர்கள் பணி புரிந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அமுதா, கிராமபுர மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்ளும் வகையில் கற்பித்து வருகிறார்.
அரசு பள்ளியிலே கணிதத்திற்கென்று தனி ஆய்வகம் அமைத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வரும் அமுதா, பெரும்பாலான கணித சூத்திரங்களை மனப்பாடம் செய்யாமல் செய்முறை விளக்கம் மூலம் மாணவர்களுக்கு எளிதில் புரிய வைத்து விடுகிறார். செயல்முறை வடிவில் கணிதத்தை மாணவர்களுக்கு பயிற்றுவித்து பெற்றோர்களின் பாராட்டை பெற்று வரும் அரசு பள்ளி ஆசிரியை அமுதாவை, சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post