இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலி வாட்ஸ் அப். இன்றைய காலகட்டத்தில் மலிவு விலை அலைபேசியில் கூட வாட்ஸ்அப் வசதி வந்துவிட்டது. அந்த அளவுக்கு வாட்ஸ்அப் செயலியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இந்தச் செயலியில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கடந்த மே மாதம் ஒரு தகவல் பரவியது.
இந்நிலையில், ஹேக்கர்கள் சிலர் வாட்ஸ் அப் செயலி மூலம் ஸ்மார்ட் போன்களில் ஊடுருவுவதாகவும் அதனால் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வரும் 1.5 பில்லியன் பயனாளர்கள் உடனடியாக அப்டேட் செய்யுறுமாறும் கூறியது வாட்ஸ் அப் நிறுவனம். இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் என்.எஸ்.ஓ. குரூப் என்ற நிறுவனம் ‘பெகாசூஸ்’ (Pegasus) என்ற ஸ்பைவேர் மூலம் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி உளவு பார்த்திருக்கலாம் என்று அப்போதே கூறப்பட்டது.
அப்டேட்டுகள் மூலம் வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட பிரச்னை சரிசெய்யப்பட்டது. ஆனாலும் விசாரணைகள் தொடர்ந்து நடந்தன. இதுதொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ. குரூப் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 1,400 நபர்களை வாட்ஸ் அப் மூலம் கண்காணித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் குற்றம்சாட்டியது. ஆனால், கண்காணிக்க பட்ட பயனர்களின் தகவல்களை வெளியிட வாட்ஸ் அப் நிறுவனம் மறுத்துவிட்டது. இந்த 1,400 பேரில் பல இந்தியர்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். வாட்ஸ் அப்பின் சேவை விதிமுறைகளை மீறி என்.எஸ்.ஓ. குரூப் நிறுவனம் மிஸ்டு கால் மூலம் ஸ்மார்ட் போன்களில் ஊடுருவியதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் வாட்ஸ் அப் தெரிவித்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம். தங்கள் கண்டுபிடிப்பான பெகாசூஸ்(Pegasus) என்ற மென்பொருளை முறையாக அரசிடம் விற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. வழக்கு தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், என்.எஸ்.ஓ. குரூப் நிறுவனத்தின் வாட்ஸ்அப் ஊடுருவல் உலகமெங்கும் உள்ள வாட்ஸ் அப் பயனாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அணைத்து இந்தியர்களின் சுய உரிமைகளையும் காக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இவற்றை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்திடம் அரசு முறையிட உள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post