அதிமுக அரசின் நலத்திட்டங்களால் மக்கள் எப்போதும் தங்கள் பக்கம் இருப்பதை அண்மையில் நடந்த இடைத்தேர்தல் வெற்றி நிரூபித்து உள்ளதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறையில் 550 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களின் நலன்களை பார்த்து பார்த்து செய்து வருவதாகவும், மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருவதாகவும் துணை முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனால் ஒரு சில கட்சிகள் ஆட்சி காலத்தில் ஏதுவும் செய்யாமல், மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் செய்வோம் என்று சொல்வதும் வேடிக்கையாக உள்ளது என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக விழாவில் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எப்போதும் அரசு கோப்புகளை நிலுவையில் வைத்ததே கிடையாது என தெரிவித்தார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே அரசு அதிமுக அரசு என்று கூறிய அமைச்சர், உள்ளாட்சித் துறைகளில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 11 பேருக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Discussion about this post