அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சாதனை புரிந்து வரும் நிலையில், தற்போது பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மோட்டர் ஸ்போர்ட்ஸிலும் சாதனை புரிந்து இந்தியாவுக்குத் தங்கம் வென்று தந்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான ஐஸ்வர்யா பிஸ்ஸே, கடந்த ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சர்வதேச அளவில் முதல் முறையாகப் பங்கேற்றார். அப்போது பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அத்துடன், முடங்கிவிடாமல் காயத்திலிருந்து மீண்டு வந்து வெற்றி வாகை சூடி, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
அந்த வகையில் எஃப்.ஐ.எம். பஜஸ் உலகக்கோப்பை மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்று பெண்கள் பிரிவில் முதல் பரிசும் இளையோருக்கான போட்டிகளில் இரண்டாம் பரிசும் வென்று திரும்பியிருக்கிறார்.18 வயதில் ரேஸிங்கில் தனக்கு ஆர்வமிருப்பதைக் கண்டுகொண்ட ஐஸ்வர்யா, 2017ஆம் ஆண்டின் தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து மூன்று ராலிகளில் வெற்றி, ஆறு தேசிய பட்டங்கள் என்று வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறார் ஐஸ்வர்யா பிஸ்ஸே. மேலும் ஐஸ்வர்யாவின் அடுத்த இலக்காக ”தகர் ராலியில்” போட்டியிட்டு வெற்றி பெருவதைத் தனது நோக்கமாக வைத்துள்ளார்.
2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள தகர் ராலியானது ,14 நாள்கள் வீதம் ஒரு நாளைக்கு 700 கி.மீ வரை வாகனம் ஓட்ட வேண்டும். மிகவும் கடினமான மற்றும் சவால்கள் நிறைந்த இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தருவதே தன் இலக்காக வைத்துள்ளார் ஐஸ்வர்யா.
பெண்களாலும் சாதித்துக் காட்ட முடியும் என்று நிரூபித்து வரும் ஐஸ்வர்யா பிஸ்ஸே தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றி பெற்று, தாய்நாட்டுக்குப் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்..
Discussion about this post