அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கின.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இரு யூனியன் பிரதேசங்களும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 முதல் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இரண்டு யூனியன் பிரதேசங்களும் இன்றுமுதல் செயல்படத் துவங்கியுள்ளன.
இரண்டு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. நில உரிமையைப் பொறுத்தவரை ஜம்மு காஷ்மீரின் நில உரிமை, மாநிலத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசின் கட்டுப்பாட்டிலும், லடாக்கின் நில உரிமை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழும் வருகின்றன.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் கிரிஷ் சந்திர முர்முவும், லடாக்கின் ஆளுநர் ஆர்.கே மாத்தூரும் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.
Discussion about this post