தமிழ்நாட்டில் சர்க்கரைத் தொழிலுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்காக வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசின் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 2017-2018 நிதியாண்டில் 134 கோடி ரூபாய் வழங்கியதையும், 2018-2019 நிதியாண்டில் 200 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
34 ஆயிரம் எக்டேரில் சொட்டுநீர்ப் பாசனத்தைச் செயல்படுத்தக் கூடுதல் மானியமாக 68 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சர்க்கரைத் தொழிலுக்குப் புத்துயிரூட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களில் சர்க்கரை ஆலைகள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்தக் கூடுதல் சர்க்கரையை ஆலைகள் விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கரும்பு விவசாயிகள் ஏற்கெனவே பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டாலும் கூட அவர்களுக்குக் கடன்வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சர்க்கரை ஆலைகள் கரும்புக் கொள்முதலுக்கான விலையை விவசாயிகளுக்கு வழங்காததே, விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததற்கான காரணம் என்பதையும் அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 4 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், தமிழகத்தில் சர்க்கரைத் தொழிலுக்குப் புத்துயிரூட்டுவதற்காக மத்திய அரசின் ஆதரவைத் தொடர்ந்து அளிப்பதுடன் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post