ஒரே நாளில் தேனி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு மற்றும் வீடு உடைத்துக் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் பொதுமக்கள் பல இடங்களில் வாக்களித்தனர். இதனால் காவல்துறையினர் கவனம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் பாதுகாப்பில் இருந்தன. இதனை பயன்படுத்தி 2 பேர் ஹெல்மெட் அணிந்து தேனி பழனிசெட்டிப்பட்டி, உத்தமபாளையம், கம்பம், ராயப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியாக பைக்கில் சென்ற தம்பதிகளை குறிவைத்து பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டனர். மேலும் இரண்டு வீடுகளையும் குறிவைத்து வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட முயன்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கும்பலை பிடிக்க தேனி எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டு கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மற்றும் அதேஊரைச்சார்ந்த காமராஜர் நகர் செல்வராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இந்த இருவர் என தெரியவந்தது.இதனையடுத்து இவர்களிடம் இருந்து 17 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதால் தேனி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Discussion about this post