திருப்பத்தூர் அருகே கர்ப்பப்பை வெடித்து குழந்தையும் தாயும் இறந்து விட்டார்கள் என கருதிய நிலையில் அறுவை சிகிச்சை மூலம் தாயின் உயிரை மீட்டு அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா, வெள்ளகுட்டை அடுத்த துறுஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விநாயகம் . இவரது மனைவி செல்வராணி இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. செல்வராணி 2-வது முறையாக கர்ப்பமடைந்தார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
செல்வராணிக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால் 2-வது குழந்தையும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் என அங்குள்ள செவிலியர்கள் கூறினர். இதையடுத்து, சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. செல்வராணியின் கர்ப்பபைக்கு செல்லும் ரத்த குழாய்கள் வெடித்ததால், அவர் மயக்கமடைந்தார். அவரது நாடி துடிப்புகள் குறைந்ததால் அவர் பேச்சு, மூச்சின்றி சுயநினைவை இழந்தார்.
இதனால், செய்வதறியாமல் தவித்த செவிலியர்கள் செல்வராணி உயிரிழந்து விட்டதாகவும், குழந்தையும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் கூறி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி உறவினர்களிடம் தெரிவித்தனர்.
அதன்பிறகு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செல்வராணி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்க கொண்டு வரப்பட்டார். அப்போது, பணியில் இருந்த அரசு மருத்துவர் ராதா, மயக்கவியல் நிபுணர் வெங்கடேசன் ஆகியோர் செல்வராணியை பரிசோதனை செய்த போது அவர் மயக்கமடைந்து உயிருக்கு ஊசல் ஆடிக் கொண்டிருந்தது இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு நவீன தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி செல்வராணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி நேரம் செல்வராணிக்கு மருத்துவ குழுவினர் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சையை அளித்தனர். இதன் பலனாக, இறக்கும் தருவாயில் இருந்த செல்வராணியை மருத்துவர்கள் காப்பாற்றினர்..
Discussion about this post