தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து, ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் புத்தகத்தில் உள்ள வெங்கட சாய் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ் வயது 24. இவரது மனைவி அனுப்பிரியா வயது 22. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சுரேஷ் தினமும் மது அருந்திவிட்டு அனுப்பிரியாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனுப்பிரியா தன் உறவினர் முரசொலிமாறன் உதவியுடன் கணவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த 13-ம் தேதி இரவு வீட்டுக்கு வந்த சுரேஷுக்கு அனுப்பிரியா ஆசையாக தோசை சுட்டுக் கொடுத்துள்ளார். அந்த தோசை மாவில் தூக்க மாத்திரைகளை அவர் கலந்து வைத்திருந்தார். ஏற்கெனவே குடிபோதையில் இருந்த சுரேஷ், தூக்க மாத்திரைகளைக் கலந்த தோசையை சாப்பிட்டதும் தூங்கி விட்டார். இதையடுத்து, முரசொலி மாறனுக்கு போனில் அனுப்பிரியா தகவல் தெரிவித்தார். அவரும் சுரேஷ் வீட்டுக்கு இரவில் வந்தார். இதையடுத்து, தூங்கிக்கொண்டிருந்த சுரேஷின் கால்கள், கைகளைப் பிடித்துக்கொண்டு அவரின் கழுத்தை கயிற்றால் இருவரும் இறுக்கியுள்ளனர். இதில் சுரேஷின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. பின்னர் இதனை மூடி மறைப்பதற்காக தன் கணவன் நெஞ்சு வலியில் இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் இடம் நாடகமாடியிருக்கிறார்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறை உதவி ஆணையர் ரவி விசாரணை செய்தபோது விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
சுரேஷ் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தினமும் மது அருந்திவிட்டு அவரை துன்புறுத்தியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அனுப்பிரியா தனது உறவினரான முரசொலி மாறனுடன் சேர்ந்து சுரேசை கொன்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கொலை என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்ததை அறிந்த அனுப்பிரியா மற்றும் முரசொலி மாறன் தலைமறைவானார்கள். இருபினும் தீவிரமான தேடுதலுக்கு பிறகு அனுப்பிரியா மற்றும் முரசொலிமாறனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Discussion about this post