தேனா வங்கி, விஜயா வங்கி, பரோடா வங்கி களை ஒரே வங்கியாக இணைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை பாரிமுனையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். அப்போது,
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வங்கிகளை ஒருங்கிணைப்பதாக வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாச்சலம் குற்றம் சாட்டினார்.
வங்கிகளை இணைப்பதன் மூலம் வங்கிக் கிளைகள் மூடப்படும் என்றும், இதனால் மக்களுக்குச் சேவை வழங்குவது பாதிக்கப்படும் என்றும் அவர் கவலைத் தெரிவித்தார். மேலும், வேலை வாய்ப்புகள் குறையும் என்றும், கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் வாராக்கடன் 14 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்றும், ஆனால் தற்போது இந்த மூன்று வங்கிகளின் வராக்கடன் 80 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் அவர் கவலைத் தெரிவித்தார்.
வங்கிகளை இணைக்கும் முயற்சி விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் கடன் வாங்கிக்கொண்டு வெளிநாடு தப்பி ஓடிய நிகழ்வுகளைத் திசை திருப்பவே மத்திய அரசு மேற்கொள்கிறது என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்க வேண்டும் என்றால், பொதுத்துறை வங்கிகளை இணைக்க கூடாது என்றும், ஏற்கனவே அறிவித்ததுபோல காலிப்பணியிடங்களை நிரப்பி பொதுமக்களுக்கு முழுமையான சேவை வழங்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post