ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
துபாய் மற்றும் அபுதாபியில் 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில், இந்தியா அணி, ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற ஹாங்காங் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
கேப்டன் ரோகித் சர்மா 23 ரன்களுக்கு வெளியேறினார். இதனையடுத்து, தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர, இருவரும் அரை சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அம்பதி ராயுடு 60 ரன்னில் வெளியேற, தவான் தனது 14-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். தவான் 120 பந்துகளை எதிர்கொண்டு, 127 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் சேர்த்தது.
286 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் முனைப்புடன் ஹாங்காங் அணியில் தொடக்க வீரர்களாக நிஷாகட் கான் மற்றும் கேப்டன் அன்சுமான் ராத் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியநிலையில், கேப்டன் அன்சுமான் ராத் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நிஷாகட் கான், 115 பந்துகளுக்கு 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, ஹாங்காங் அணி 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
Discussion about this post