நான்கு வயதிலேயே திருக்குறள், கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, குறிஞ்சிப்பாட்டு என சொல்லி அசத்திவரும் சிறுவன் பற்றிய சிறப்பு தொகுப்பு
கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தை அடுத்துள்ள பிரீமியர் மில்ஸ் எனும்
பகுதியில் வசித்து வரும் கருணா ஹரிராம், கீதா தம்பதியினரின் மகன் ராகுல் ராம்.
நான்கு வயதே ஆகும் சிறுவன் ராகுல் ராம், ஈச்சனாரியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.
தமிழ்பற்று நிறைந்த கருணா ஹரிராம், தன்னுடைய மகனையும் தமிழ்ப்பற்றுடன் வளர்க்க விரும்பி, அவனுக்கு மூன்று வயது இருக்கும் போதே திருக்குறள் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
தன் மகன் மிகவும் ஆர்வத்துடன் திருக்குறள் கற்றுகொள்வதை கவனித்த கருணா ஹரிராம், திருக்குறளை அதன் பொருளுடன் சொல்லிகொடுத்துள்ளார்.
மிகவும் குறுகிய காலத்தில் சிறுவன் ராகுல் ராம் திருக்குறளில் உள்ள ஆயிரத்து முண்ணூற்று முப்பது குறளையும் கற்றறிந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்த தந்தை, அவனுக்கு தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களையும் கற்றுத்தருவது என்று முடிவெடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் நூல்களான ஆத்திச்சூடியும், கொன்றை வேந்தன் உள்ளிட்டவற்றை சிறுவன் ராகுல் கற்றுத் தேர்ந்த தோடு, கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டில் உள்ள் 99 மலர்களின் பெயர்களையும் தன்னுடைய 4 ஆம் வயதிலேயே கற்றறிந்துள்ளார்.
மேலும் சிறுவன் ராகுல் தன்னுடைய நான்கு வயதில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும்
அதன் தலைநகரங்களை மனப்பாடமாக சொல்வது, ஒரு நாட்டின் கொடியை பார்த்து
அந்த நாட்டின் பெயரைச் சொல்வது போன்றவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தான்.
அதோடு மட்டுமல்லாமல், இந்திய நாட்டில் உள்ள மாநிலங்கள் பெயர்களை
சொல்லுதல், தமிழக மாவட்டங்களின் பெயர்களை சொல்லுதல், மேலும் அவற்றை
வரைபடத்தில் குறிப்பிட்டு சொல்வது, மற்றும் இந்திய தலைவர்களின் பெயர்களை
சொல்லுதல் என சிறுவன் ராகுல் ராமின் திறமை நீண்டு கொண்டே செல்கிறது.
பெரும்பாலும், தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வியின் போதே தமிழைத் தவிர்த்து வேறு மொழியை கற்றுத் தரும் பெற்றோர்களுக்கு மத்தியில், தங்கள் மகனை தமிழ் மீது ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கற்றுக்கொடுத்துவரும் சிறுவன் ராகுலின் பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்களே…
Discussion about this post