இன்று பல துறைகளில் பெண்கள் தங்களின் முத்திரையை பதித்து, கோலோச்சி வரும் நிலையில், சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. கம்பைச் சுழற்றி வீரம் காட்டுவதிலும் பெண்கள் சளைத்தவர்களல்ல என நிரூபித்துள்ளார், சிறுமி ஒருவர்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.. எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி’ என்று 80 ஆண்டுகளுக்கு முன்பே தான் கண்ட புதுமைப் பெண் குறித்து பாரதி கவிதை புனைந்தான். இன்று பற்பல துறைகளில் பெண்கள் தங்களின் முத்திரையைப் பதித்து கோலோச்சி வரும் நிலையில், பம்பரமாய் சுழன்று சிலம்ப நாயகியாய் சிறகடித்துப் பறக்கிறார் மதுரையைச் சேர்ந்த ராசிகா.
தனது சகோதரன் கிஷோருடன், தினமும் காலையில் தனது வீட்டிலேயே முறையாக சிலம்ப ஆசிரியர் வைத்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ராசிகா. முறையான பயிற்சி, விடாமுயற்சி ஆகியவை, கண்டிப்பாக வெற்றியை ஈட்டித் தரும் என்பதற்கு இவர்கள் சிறந்த உதாரணம் .
மலேசிய நாட்டில், சென்ற மாதம் நடைபெற்ற உலகளாவிய சிலம்பாட்டப் போட்டியில், தம்பி கிஷோர் இரண்டாம் பரிசு வெல்ல, பெண்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் வகையில், ராசிகா முதல் பரிசை தட்டி வந்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் எத்தனை சண்டை காட்சிகள் இருந்தாலும், ஒற்றை குச்சியை கையில் பிடித்து ஆடும் சிலம்பாட்டத்துடன் கலந்த சண்டைக் காட்சிக்கு, இன்றுவரை வரவேற்பு குறையவில்லை. இந்த இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இவர்களுடைய பயிற்சிக்கு உற்ற துணையாக, இவர்களது பெற்றோர்கள் இருந்து வருவது பாராட்டுக்குரியது
இவர்களது தந்தை நவநீதகிருஷ்ணன், தேனீர் கடை நடத்தி, சொற்ப வருமானமே ஈட்டிவந்தாலும், எதிர்காலத்தில் தங்களுடைய குழந்தைகள் நமது பாரம்பரிய கலையோடு, தற்காப்புக் கலையான இந்த சிலம்பத்தில் வல்லுநர்களாகவும், சிறந்த கலைஞர்களாகவும் வர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
Discussion about this post