பிரபலங்களுக்கு எதிரான தேசத் துரோக வழக்கு தொடர்பாக பாஜகவைக் குற்றம் சாட்டுவது தவறு எனத் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்களுக்கு எதிராக அண்மையில், தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரபலங்களுக்கு எதிராகத் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதில் பாஜகவுக்கோ, மத்திய அரசுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். மனு ஒன்றின் மீதான விசாரணையில் பீகார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரிலே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதில், மத்திய அரசையோ, பாஜகவையோ குற்றம்சாட்டுவது, மோடி தலைமையிலான அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்றும், சிலர் அற்பமான ஆதாயங்களுக்காகவே இது போன்ற கருத்துகளைக் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post