உலகப் புகழ் பெற்ற பாப் பாடகி சியா, எட்ஸ் என்ற விநோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி ஐரோப்பிய நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாப் இசை உலகின் புகழ் பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் சியா. பாப் பாடல்களை எழுதுவது, இசையமைப்பது, பாடுவது, பாப் ஆல்பம்களை இயக்குவது – போன்ற அனைத்திலும் தனி முத்திரையைப் பதித்த ஆஸ்திரேலியர் இவர். 9 முறை கிராமி விருதுக்கும், 2 முறை ஆஸ்கர் விருதுக்கும் இவரது பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இவரது சாண்ட்லியர் ஆல்பம் யூ டியூபில் 200 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
தற்போது 43 வயதாகும் சியா, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மேடைகளில் தோன்றும் போது செயற்கை முடி, தலை அலங்காரம் – இவற்றின் மூலம் தனது முகத்தை மறைத்துக் கொள்ளும் வழக்கத்தைக் கடைபிடித்து வருகிறார். இவரது முகத்தையே காணமுடியாவிட்டால் கூட, இவரது குரலுக்காக பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
சியா ஏன் மக்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறார்?, ஏன் முகத்தை எப்போதும் மறைக்கிறார்? – என்ற கேள்விகள் அவர் ரசிகர்களிடம் நெடுங்காலமாக உள்ளன. அதற்கான விடையை இப்போதுதான் சியா டுவிட்டரில் முதன்முறையாகக் கூறி உள்ளார்.தனக்கு எட்ஸ் என்ற நோய் உள்ளதாகவும், வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், உடலும் உணர்வும் வலியால் துடிக்கும் மக்களைத் தான் நேசிப்பதாகவும் சியா தனது பதிவில் கூறி உள்ளார். சியாவின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
எஹ்லெர்ஸ் டன்லஸ் சிண்ட்ரோம் (Ehlers -Danlos syndromes ) – என்பதன் சுருக்கமே எட்ஸ் ஆகும். இது மரபினால் வரும் நோய், இதில் 13 வகைகள் உள்ளன. இது தசைச் சிதைவை ஏற்படுத்தி தோலின் நெகிழும் தன்மையை அதிகரிக்கும். எட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் லேசான வலி முதல் தாங்கவே இயலாத வலி வரையிலான பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த நோய்க்கு இதுவரையில் எந்த சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. சியா-வின் டுவிட்டர் பதிவால் ஐரோப்பிய நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் இப்போதுதான் இந்த நோய் குறித்து அறிந்து வருகிறார்கள்.
சிறிது காலம் முன்பு மது போதையால் கடும் பாதிப்பை சந்தித்து, அவற்றில் இருந்து மீண்டு வந்தவர் சியா, அவர் இப்போது மீண்டும் இன்னொரு பிரச்சனையில் சிக்கி உள்ளது அவரது ரசிகர்களுக்கு மனவேதனையை அளித்திருந்தாலும், சியாவின் வெளிப்படையான பதிவால் எட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வும் ஆய்வுகளும் அதிகரிக்கும் என்பதால் பலர் இந்த வெளிப்படையான பதிவை வரவேற்று உள்ளனர்.
Discussion about this post