ஜெர்மனியில் சர்க்கஸ்ஸில் இருந்து தப்பித்து சாலைகளில் திரிந்த 2 வரிக்குதிரைகளில் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏன் கொல்லப்பட்டது வரிக் குதிரை?
வரிக் குதிரைகள் பார்க்க குதிரையைப் போல இருந்தாலும், அவை கழுதைகளின் பண்புகளையே அதிகமாகக் கொண்டிருப்பவை. எனவே இவற்றைக் கட்டுப்படுத்துவது எப்போதுமே கடினம்தான்.
ஜெர்மனியில் உள்ள ஒரு சர்க்கஸில் இருந்து இரண்டு வரிக்க்குதிரைகள் நேற்று தப்பித்து வெளியே வந்தன. ஜெர்மனியின் வடக்கே உள்ள நகரமான ரஸ்தோக்கின் நவீன நெடுஞ்சாலைகளை அவை கடக்க முயற்சி செய்தபோது அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டன. 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு எதிரே இவை வந்ததால், வாகன ஓட்டிகள் பலரும் பாதிக்கப்பட்டனர், அவர்கள் ஜெர்மானிய காவல்துறைக்கு இதுகுறித்த புகார்களை அனுப்பினர்.
இதனால் ஜெர்மானிய காவல்துறையினர் அந்த இரண்டு வரிக் குதிரைகளையும் பிடிக்க முயற்சி செய்தனர், காவல்துறை சார்பில் இவை குறித்து டுவிட்டரிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சாலையை விட்டு வெளியேறாத இந்த வரிக் குதிரைகளை பிடிப்பது கடினமானதாக இருந்ததோடு, காவல்துறை வாகனத்திற்கும் வரிக் குதிரைகளால் சேதம் ஏற்பட்டது.
இதனையடுத்து ஜெர்மன் காவல்துறையினர் ஏ20 நெடுஞ்சாலைப்பகுதியில் திரிந்த ஒரு வரிக் குதிரையை சுட்டுக் கொன்றனர், இன்னொரு குதிரையை மட்டுமே உயிரோடு பிடிக்க முடிந்தது. இதையடுத்து ஏ20 நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த விபத்துகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை என்று ஜெர்மன் காவல்துறை தெரிவித்து உள்ளது. ஆனால், இந்த வரிக் குதிரைகள் எப்படி சர்க்கஸில் இருந்து வெளியே வந்தன? – என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
Discussion about this post