சவுதியில் நடந்த ட்ரோன் தாக்குதல் உலகையே பரபரப்பாக்கியுள்ளது. எண்ணெய் உற்பத்தியிலும், ஆயுதங்கள் இறக்குமதியிலும் உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் சவுதியில் தாக்குதல் நடந்தது எப்படி?
கடந்த செப்டம்பர் 14-ம் தேதி காலை 4 மணிக்குத் தலைநகர் ரியாத் அருகேயுள்ள அப்கைஸ் மற்றும் குரேஸ் பகுதியிலஅராம்கோவுக்குச் சொந்தமான இரு ஆலைகளை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு, தினசரி 5.7 லட்சம் பேரல்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.
உலகிலேயே அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு சவுதி அரேபியா. இந்த நாடுதான் ஆயுதங்கள் இறக்குமதியிலும் முதலிடத்தில் உள்ளது. 25 ட்ரோன்களைக் கொண்டு, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதலுக்குப் பின்னணியில், ஈரான் இருப்பதாக அமெரிக்காவும், சவுதியும் குற்றம் சாட்டியுள்ளன. அப்படியானால், ஏமனிலிருந்து ரியாத்துக்குக் கிட்டத்தட்ட 1,000 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ரேடார்களின் கண்களிலிருந்து இந்த ட்ரோன்கள் தப்பியது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.
ஈராக் போரின்போது ஸ்கட் – பேட்ரியாட் ஏவுகணைகளின் போர் பிரசித்தம். மிக உயரத்தில் பறந்து வரும் ஈராக்கின் ஸ்கட் ஏவுகணையை அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை துல்லியமாகத் தாக்கும். பேட்ரியாட்டின் பலமே அதுதான். மிக உயரத்தில் பறந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணைகள் அவற்றின் ரேடார் வளையத்தைத் தாண்டாது. அதே , பேட்ரியாட் சிஸ்டம்தான் சவுதி அரேபியா ஆயில் கம்பெனியான Saudi Aramco-வில் பொருத்தப்பட்டுள்ளது. பேட்ரியாட், ஸ்கட் இரண்டுமே மிக உயரத்தில் பறந்து வரும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் வல்லமை கொண்டது. இங்கேதான், சவுதி தவறு செய்துவிட்டது!
பேட்ரியாட் சிஸ்டம் மிக உயரத்தில் பறந்து வரும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் அதை யோசித்த கிளர்ச்சியாளர்கள் தாழப்பறக்கும் ட்ரோன்களைக் களத்தில் இறக்கத் தீர்மானித்தனர். ட்ரோன்கள் அளவில் சிறியதாக இருப்பதால், ரேடாரில் சிக்காது என்றும் சொல்லப்படுகிறது. Aramco நிறுவனத்தின் பாதுகாப்பு விவகாரத்தில், அதிகாரிகள் அலட்சியம் காட்டியதும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. சாதாரணமாக ஒரு ட்ரோன் பறந்தாலே சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுவிடுகிறது. அப்படியிருக்கையில், 25 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதும், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகின் இரு பெரும் ஆயுத வியாபாரிகள். சவுதியைத் தன் பக்கம் இழுக்க வேண்டுமென்பது ரஷ்யாவின் நீண்ட கால கனவு. இதன் காரணமாகவே, சவுதியின் பிரச்னைக்குத் தங்களிடம் தீர்வு இருப்பதாகத் துருக்கி தலைநகர் அங்காராவில் ரஷ்ய பிரதமர் புதின் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் சவுதி பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தர்கி அல் மார்கி, “ட்ரோனில் பொருத்தப்பட்ட ஏவுகணைகள் நிச்சயம் ஈரான் நாட்டு தயாரிப்புதான். தாக்குதலுக்குப் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன. எங்கள் பதிலடி உடனடியாக இருக்காது. ஆனால், உறுதியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
ஈரான், சவுதி நாடுகளின் மோதலால், வளைகுடாவில் போர் ஏற்படுமா? அல்லது அமைதி நிலவுமா? என்பதை காலம் தான் முடிவு செய்யும்..
Discussion about this post