தந்தை பெரியார் சிலையை இழிவு படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சனில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காலணி வீசி அவமதித்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பெரியார் சிலையை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனத் தெரிவித்தார்.
ஒரு சமூக நீதி தந்தையாக இருக்கின்ற தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடியும் எனத் தெரிவித்த அமைச்சர், இதுபோன்ற மனிதக்குலம் ஏற்றுக்கொள்ளாத செயலை தமிழக அரசு அனுமதிக்காது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆரம்ப கட்டத்திலேயே இதுபோன்ற செயல்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அரக்கத்தனமாக, யார் இத்தகைய செயலில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Discussion about this post