சரியான போக்குவரத்து வசதி இல்லாத தெங்குமரஹாடா மலைக்கிராமத்திற்கு, 9 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைத்துத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் சத்தியமங்கலத்தின் கடைக்கோடி எல்லையில் அமைந்துள்ளது தெங்குமரஹாடா என்ற மலைக்கிராமம்.
திரும்பும் திசையெங்கும் மலைகளால் சூழப்பட்டு, வாழை மரங்கள் நிறைந்து காண்போர் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பசுமையாக அமைந்துள்ளது இந்த கிராமம்.
நீலகிரியில் இருந்து இந்த கிராமத்திற்கு மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வழியாக தான் செல்ல முடியும்.
மேலும், இவ்வூருக்கு ஆற்றைக் கடந்து செல்ல சரியான பாலம் மற்றும் சாலை வசதி இல்லாத காரணத்தால், இங்குள்ள ஆண்களுக்கு பிற பகுதி மக்கள், பெண்களைத் திருமணம் செய்து தர தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால், 45 முதல் 60 வயது வரை ஆகியும் திருமணமே ஆகாத நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் தெங்குமரஹாடா கிராமத்தில் வசித்து வருகின்றனர் என்பது ஆண்களின் வேதனையின் உச்சமாகும்.
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காகவும் தங்களின் நிறை, குறைகளை அரசிடம் எடுத்து சொல்லவும் வேண்டுமானால், தெங்குமரஹாடாவிலிருந்து பரிசல் மூலம் ஆற்றைக்கடந்து, 35 கிலோமீட்டர் வனப்பகுதியில் அமைந்துள்ள குண்டும் குழியுமான சாலையையும் கடந்துதான், பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 50 ஆண்டுகளை கடந்து, விவசாயம் செய்து வரும் இந்த கிராம மக்களின் ஒரே ஒரு கோரிக்கை என்னவென்றால், தங்கள் ஊருக்கு சென்று வர மாயார் ஆற்றின் மேல் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்பது மட்டுமே.
இந்த நிலையில், தற்போது தமிழக ஊரக வளர்ச்சிமற்றும் சிறப்பு செயலாக்கத்துறை அமைச்சர் திரு. S.P. வேலுமணி , 9 கோடி ரூபாயில், புதிய பாலம் கட்டி தர பூமி பூஜை செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
Discussion about this post