சென்னை திருவல்லிக்கேணியில் இளம் ரவுடியான அரி என்ற அறிவழகனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 3 குற்றவாளிகளை, சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் அரியலூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தில் உள்ள கெனால் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். வேலை எதுவும் செய்யாமல், அப்பகுதியில் ரவுடியாய் வலம் வந்துள்ளான். அறிவழகன் மீது திருட்டு, வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதால், ஐஸ்ஹவுஸ் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில், குற்றவாளிகள் பட்டியலில் இவர் பெயர் உள்ளது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அறிவழகனை, திடீரென ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தலையில் சரமாரியாக வெட்டிய அக்கும்பல், அவர் உயிரிழந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
அறிவழகன் கொலை குறித்து, அண்ணா சதுக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணா சிங் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் சரவணண் மேற்பார்வையில், அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் வெங்கட்குமார் தலைமையில், தனிப்படை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட அறிவழகன், கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ரவுடி பல்பு குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், அந்தப்பகுதியில் அரியை தீர்த்து கட்டினால், தாதாவாக வலம் வரலாம் என்ற கண்ணோட்டத்தில் கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகள் அரியலூரில் தலைமறைவாக உள்ளது, தனிப்படைக்கு தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக பாலாஜி, வினோத் மற்றும் அவர்களுக்கு உதவிய சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை, அரியலூரில் வைத்து அண்ணாசதுக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். தாதாவாக வலம்வர நினைத்த ரவுடி அரியின் மரணம் மற்ற ரவுகளுக்கு ஒரு பாடம்…
Discussion about this post