இந்திய வங்கித் துறையில் வாராக் கடன்கள் மிக அதிக அளவுக்கு உயர்ந்துவிட்டன. வங்கி சேவைகள் மீதான வாடிக்கையாளர்களின் புகார்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வங்கிகளுக்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு அங்கமாக தற்போது பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
புதிய நிபந்தனைகளின்படி, இனி பிஎம்சி வங்கியில் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்க முடியாது. இந்த உத்தரவு இன்னும் 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
அத்தோடு, வரும் அடுத்த 6 மாதங்களுக்கு, பிஎம்சி வங்கியும் புதிதாக கடன் வழங்குதல், ஏற்கனவே கொடுத்த கடன்களுக்கான செலுத்தும் காலத்தை நீட்டித்தல், சொத்துகள் அல்லது முதலீடுகளுக்காக செலவு செய்தல், பங்குகள் அல்லது சொத்துகளை விற்கவும் முடியாது. ஒருவேளை அப்படி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ரிசர்வ் வங்கியிடம் எழுத்துப் பூர்வமாக அனுமதி வாங்க வேண்டும்.
1984ல் மும்பையில் தொடங்கப்பட்ட பிஎம்சி வங்கியானது தற்போது இந்தியாவின் 6 மாநிலங்களில் 137 கிளைகளுடன் இயங்கும் ஒரு பெரிய கூட்டுறவு வங்கியாக வளர்ந்துள்ளது. இதில் மக்கள் பணம் 11 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது.
பிஎம்சி வங்கியின் வாராக் கடன்கள் 1.99 சதவிகிதத்தில் இருந்து திடீரென இந்தாண்டு 3.76 சதவிகிதமாக உயர்ந்துள்ளன. அத்தோடு, இந்த வங்கிக்கு உரிய சொத்துகளின் தரமும் குறைந்துள்ளது. அதனால்தான் ரிசர்வ் வங்கி இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த நிபந்தனைகளால் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
பிஎம்சி வங்கி மீதான ரிசர்வ் வங்கியின் புகார்களை ஒப்புக்கொண்ட நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ், நிர்வாகத் தவறுகள், முறைகேடுகள் ஆகியவற்றால்தான் இந்த நிலை வந்துள்ளதாகவும், 6 மாத காலத்திற்குள் அனைத்தும் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுவரை வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கடுமையான நிபந்தனைகளை விதித்து வந்த ரிசர் வங்கி, வங்கிகளுக்கும் நிபந்தனைகளை விதிப்பது ஒருபக்கம் பாராட்டப்பட்டாலும், இன்னொரு பக்கம் இது போன்ற நிபந்தனைகளும் கூட கடைசியில் தங்களையே பாதிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post