ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை, திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் கோவிலில் வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகர முடையார் உடனுறை அறம் வளர்த்தநாயகி கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான இரண்டரை அடி உயரம் உள்ள நடராஜர் சிலை உட்பட நான்கு சிலைகள் 1982 ஆம் ஆண்டு களவு போனது. கடத்தப்பட்ட இந்தச் சிலை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள்ள ஏஜிஎஸ் அருங்காட்சியகத்தில் இருப்பது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு உதவியுடன் மீட்கப்பட்ட நடராஜர் சிலை 13ஆம் தேதி இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை ஒப்படைக்கப்பட்டு அதையடுத்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் கல்லிடைக்குறிச்சிக்குக் கொண்டுவரப்பட்ட சிலையை ஐயப்பன் கோவிலில் இருந்து குலசேகரமுடையார் கோவில் வரை ஊர்வலமாகக் கொண்டுவந்தனர். 37 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்ட சிலைக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
Discussion about this post