மனிதர்களின் எதிர்காலத்தைக் கட்டமைக்க உள்ள பொருட்களில் ஒன்றாக கிராஃபீன் கருதப்படுகிறது. உலகின் மிக மெல்லிய, அதேசமயம் மிக உறுதியான கரிமப் பொருட்களில் ஒன்றான கிராஃபீன் செயற்கைக் கோள்கள் முதல் குண்டு துளைக்காத ஆடைகள் வரை அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது.
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட கரிமப் பொருட்களில் எல்லாம் மிக மெல்லிய கரிமப் பொருள் கிராஃபீன். ஒரு மில்லிமீட்டர் தடிமனுள்ள கிராஃபைட்டில் 30 லட்சம் கிராஃபீன் அடுக்குகளை வைக்க முடியும் – என்பது இதன் மென்மையைச் சொல்லும். அதே சமயம் கிராஃபீன் ஒரு வலிமையான பொருளும் கூட, எஃகைவிட கிராஃபீன் 100 மடங்கு உறுதியானது. இது மனிதர்களால் 2004ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக அறியப்பட்டது.
அடிப்படையில் கிராஃபீன் என்பது கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்று. கரி, வைரம், கிராஃபைட் – போன்ற கார்பனின் மற்றைய புறவேற்றுமை வடிவங்களைப் போன்றதுதான் கிராஃபீனும்.
கிராஃபீன் கார்பனின் ஒற்றை அணு அடுக்கு. இதில் உள்ள கார்பன் மூலக்கூறுகள் அறுங்கோண அமைப்பில் பிணைந்துள்ளதால்தான் கார்பனின் மற்ற வடிவங்களை விடவும் இது வலிமையானதாக உள்ளது. இதன் மூலக்கூறில் இடைவெளியோ, வெற்றிடமோ இல்லை என்பதால் இதன் வலிமையை நாம் வேறு எதோடும் ஒப்பிட முடியாது!.
கிராஃபைட்டின் மீது ஒடு செலபன் டேப்பை ஒட்டி எடுக்கும் போது கிராஃபீனை ஓரளவுக்குப் பிரிக்க முடியும். கிராஃபைட்டில் இருந்து கிராஃபீனைப் பிரித்தெடுக்கும் செய்முறையை ஆண்ட்ரே கேம், கான்ஸ்ட்டாண்டின் நோவாசெலோவ் ஆகிய அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். இந்தக் கண்டுபிடிப்பிற்கான இவர்களுக்கு 2010ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
தாமிரத்தைப் போலவே கிராஃபீனுக்கும் மின்கடத்தும் திறன் உள்ளது. ஒளியால் கிராஃபீன் தகட்டை ஊடுருவ முடியும் என்றாலும், இதன் அடர்த்தியை அணுக்களால் கடக்க முடியாது. மிகச் சிறிய அணுக்களில் ஒன்றான ஹீலியம் அணுகூட கிராஃபீனைக் கடந்தது இல்லை. இப்படிப் பல அதிசயிக்கத்தக்க பண்புகள் கிராஃபீனுக்கு உள்ளன.
2010ஆம் ஆண்டில் கிராஃபீன் பற்றி உலகம் அறிந்து கொண்ட போது, கிராபீன்கள்தான் உலகின் எதிர்காலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அனைத்து வடிவங்களுக்குக்கும் கிராஃபீன்களை மாற்ற முடியும் என்பதால், செயற்கைக் கோள்கள் முதல், காயில்கள் வரையில் அனைத்திற்கும் கிராஃபீன்கள் சிறந்த தேர்வு – என்று அறிவியல் இதழ்கள் கட்டுரைகளை எழுதின. பூமிக்கும் பிற கோள்களுக்கும் இடையே கூட கிராஃபீனால் பாதைகள் அமைக்க முடியும் -என்றும், குண்டு துளைக்காத ஆடைகளை கிராஃபீனால் உருவாக்க முடியும் – என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறினார்கள். ஆனால், சந்தையில் உள்ள சிலிக்கான் மற்றும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பங்களே தற்போதைய தேவைகளுக்குப் போதுமானவையாக உள்ளதால் சந்தையில் கிராஃபீன்களால் இதுவரை பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.
ஒரு காலத்தில் பிளாஸ்டிக்குகள் கூட ஆய்வகத்தில் உள்ள அரிய பொருட்களாகத்தான் இருந்தன, நமது கைபேசியின் டிஸ்பிளேமீது உள்ள கொரில்லா கிளாஸ் எனப்படும் கண்ணாடிகள் அவை கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வணிக உலகால் ஏற்கப்பட்டன. இவை போலவே கிராஃபீன்களும் ஒரு நாள் உலகை ஆளும் என்று அறிவியல் அறிஞர்களால் கணிக்கப்படுகிறது.
Discussion about this post