திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற புரட்டாசி மாத சனி உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பகதர்கள் பங்கேற்றனர்.
புரட்டாசி மாதத்தில் 30 நாட்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வச் செழிப்பு உள்பட அனைத்துப் பலன்களும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஐதீகம். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதல் நம்பெருமாள், தாயார் மற்றும் சக்கரத் தாழ்வார் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தின் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டிப் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post