மணப்பாறை அருகே காரில் இளம்பெண்ணை கடத்தி சென்றவர்களை வழிமறித்த பொதுமக்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டி வயக்காட்டை சேர்ந்தவர் கணபதி – இவரது மகள் சுகந்தி இருவரும் துலுக்கம்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள தண்ணீர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மாலை வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் தந்தையும், மகளும் சென்று கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல்லிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஆம்னி வேன், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை வழிமறித்து, சுகந்தியை மட்டும் காரில் தூக்கி போட்டு அதிவேகமாக அங்கிருந்து கிளம்பியது. காரை பின் தொடர்ந்து கணபதி சத்தமிட்டவாறு ஓடி வரவே காரை நிறுத்திய அந்த கும்பல் கணபதியையும் அடித்து காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு அதிவேகமாக திருச்சியை நோக்கி சென்றது.
காரில் இருந்த தந்தையும், மகளும் அபய குரலில் சத்தம்போட்டு கத்த ஆரம்பித்தனர் பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியில் காரை வழிமறித்து பிடிக்க அதன் ஊழியர்கள் தயாராக நின்றனர். இதனையறிந்த அந்த கும்பல் காரை மீண்டும் திண்டுக்கல் சாலையை நோக்கி திருப்பியது. இளம்பெண் கடத்தப்பட்ட விபரம் அறிந்து காரை மடக்க மணியாரம்பட்டி, கல்பட்டி பகுதி மக்கள் முயன்றனர். இருப்பினும் கார் அதிவேகமாக சென்று புதுக்கோட்டை அருகே பக்கிரி காடு பகுதியில் செல்லும்போது அங்கே திரண்டு நின்றிருந்த பொதுமக்களை பார்த்து டக்கென்று நின்றது.
இதில் நிலைதடுமாறிய கார் கீழே கவிழ்ந்தது. இதனையடுத்து அந்த காரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் தந்தையையும், மகளையும் மீட்டு பாதுகாப்பாக அனுப்பி விட்டு பிடிபட்ட கடத்தல்காரர்களை அடித்து நைய புதைத்தனர். இதில் மூன்று பெரும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்த மணப்பாறை காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினர். இதனால் திருச்சி – திண்டுக்கல் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலைக்கு சென்றுவிட்டு தந்தையுடன் வீட்டிற்கு சென்ற இளம்பெண்ணை வழிமறித்து காரில் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post