ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சால், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்திருந்தது. 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 2 விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து, 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 5 ரன்னிலும், மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த மார்னஸ் லபஸ்சாங் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேகரித்தனர். லபஸ்சாங் 48 ரன்னில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் ஆடிய ஸ்டீவன் ஸ்மித் 80 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த வீரர்கள் இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Discussion about this post