தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே கோழிப்பண்ணை உரிமையாளர், மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிப்பன். இவரது மகன் இசக்கிப்பாண்டி…வயது 27… இவர் அந்த பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார் . மேலும் மாடுகள் வங்க விற்கும் புரோக்கர் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் இருந்த போது தொலை பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து இசக்கிப்பாண்டி இருசக்கரவாகனத்தில் நெல்லை –தூத்துக்குடி நான்குவழிச்சாலை வல்லநாடு அருகே அகரம் விலக்கு பகுதிக்கு வந்தபோது மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து உடலைக் கைப்பற்றி நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஊரின் மையப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் சந்தேகப்படும்படியான நபர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு மாடியில் இருந்த நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது ஊர் பொதுமக்கள் அவரை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர் . தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் .
Discussion about this post