இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற விஜய் மல்லையா, அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடினார். இதையடுத்து, அவரை நாடு கடத்துவது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா அண்மையில் தெரிவித்தார். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஜேட்லி மற்றும் பிரதமர் மீது காங்கிரஸ் கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டை எழுப்பினர். பாஜகவும் பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தது.
இந்த விவகாரம் குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சாம்னா கடுமாக விமர்சித்து தலையங்கம் வெளியிட்டுள்ளது.
” மல்லையா பொய் பேசுபவர். மல்லையாவின் கருத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இந்த வழக்கில் ஜேட்லி மீது குற்றம்சாட்டுவதின் அவசியம் என்ன? ஆனால், காங்கிரஸ் அதைத்தான் செய்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினராக அவருக்கான உரிமை நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கிறது. மல்லையாவின் திட்டத்தை ஏற்க வங்கிகள் தயாராக இல்லை. அதனால் தான் அவர் ஜேட்லியை நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்துள்ளார். இதை காரணம் காட்டி இந்த வழக்கில் ஜேட்லியை காங்கிரஸ் குற்றம் சாட்டுவது கேலிக்குரியது.
நீரவ் மோடி குடும்ப நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதனால், நீரவ் மோடி தப்பித்துச் சென்றதற்கு ராகுல் காந்தியை குற்றம் சாட்டலாமா?
மல்லையாவின் கருத்துக்கும், காங்கிரஸ் கட்சியின் தொடர் குற்றச்சாட்டுக்கும் பின்னணியில் யாரேனும் உள்ளனரா? என்று அந்த தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் அனைத்தும் 2019-ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலின் பகுதி தான் என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
Discussion about this post