தாய்லாந்திற்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு கடைகளில் சுத்தமாகவும் அழகாகவும் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் இளநீர் காய்களை வாங்கிக் குடிப்பது வழக்கம். பொதுவாக நமது ஊரில் இளநீர் காய்களில் மேல் அல்லது கீழ் பகுதிகளை வெட்டி விட்டு குடிக்க தருவார்கள்.
ஆனால் தாய்லாந்தில் இளநீர் காயின் மேல் பகுதி முழுவதையும் லாவகமாக சீவி விட்டு விற்பனைக்கு வைத்திருப்பார்கள். இளநீரை லாவகமாக சீவுவதை அங்குள்ள மக்கள் செய்துகொண்டே இருப்பார்கள். இவ்வாறு இளநீர் காய்களை வெட்டுபவர்களை புதிதாக ஒரு நோய் தாக்கியது. கை விரல்களில் உணர்வின்மை, கூச்சம் ஆகியவற்றை அவர்கள் உணர்ந்தார்கள்.
ஒரு காகிதத்தை கூட தூக்க முடியாத அளவுக்கு வலுவிழப்பு ஏற்பட்டது. இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இது கார்பல் டனல் சிண்ட்ரோம் எனத் தெரிவித்தனர்.
இந்த சிண்ட்ரோம் தாக்குதல் தாய்லாந்து இளநீர் வெட்டும் தொழிலாளர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. இந்த மாதிரியான வேலைகளில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய யாருக்கும் வரலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
கைகளை அழுத்தி வேலை செய்பவராக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உங்களுக்கு அந்தக் குறைபாடு இருக்கிறதா? என்று சோதித்துக் கொள்வது நல்லது.
நமது கைகளின் முழு நீளத்துக்கும் பயணப்படும் மீடியன் நரம்பு, மணிக்கட்டில் இருக்கும் கார்பல் டனல் மூலமாக, கை விரல்களில் முடிகிறது. இந்த நரம்பில் அழுத்தம் கூடும் போது தான் கார்பல் டனல் சிண்ட்ரோம் தாக்குதல் உண்டாகிறதாம். இந்த மீடியன் நரம்பு கைகளில் சுட்டு விரல் தவிர பிற அனைத்து விரல்களின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post