டெல்லியில் உள்ள புராரியில் சந்தாவத் என்பவரது 15 வயது முதல் 77 வயது வரையிலான குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் ஒரே நாளில் தூக்கில் தொங்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என செய்திகள் வெளியாகின.
அதே நேரம் வெளியூர்களில் வசித்ததால் இந்தக் கொடுமையான நிகழ்விலிருந்து, சந்தாவத் குடும்ப உறுப்பினர்களான மூத்த மகன் தினேஷ் சிங் சந்தாவத், மற்றும் சுஜாதா நாக்பால் உயிர் தப்பினர். அவர்களை உளவியல் பரிசோதனைக்கு சிபிஐ உட்படுத்தியது.இதன் மூலம் சந்தாவத் குடும்பத்துக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து உளவியல் பிரேதப் பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். உளவியல் பிரேத பரிசோதனை என்பது தற்கொலை நிகழ்வதற்கு முன்னும், பின்னுமான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் மனநிலையை ஆராயும் முயற்சி ஆகும்.
பிரேதப் பரிசோதனையில் இத்தகைய நூதன முறை 1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில்,
11 பேருக்கும் தாங்கள் இறக்கப் போகிறோம் என்ற உணர்வோ அல்லது எதிர்பார்ப்போ அது குறித்த அச்சமோ இருக்கவில்லை என்பது கண்டயறிப்பட்டுள்ளது. தாங்கள் நம்பிய ஒரு சடங்கை நிறைவேற்றுவதாக எண்ணி அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடைசிவரை இது ஒரு தற்கொலை முயற்சி என்ற எண்ணமே அவர்களிடம் இல்லை என்கிறது பரிசோதனை முடிவு.
புராரி மரணங்களில் தெரிய வந்த மற்றுமொரு உண்மை. சந்தாவத் குடும்பத்தினர் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து டைரி எழுதி வந்துள்ளனர்.. அந்த டைரியில் இருந்த பெருமளவு தகவல்களில் முக்கியமானது அவர்களுக்கு இருந்த தாந்த்ரீக நம்பிக்கை ஆகும். மறைந்த தந்தையின் ஆன்மா வந்து தங்களை வழிநடத்துவதாக சந்தாவத் குடும்பத்தின் இளைய மகன் லலித் சந்தாவத் உறுதியாக நம்பியிருக்கிறார். அதோடு தனது குடும்பத்தினரையும் மூளைச்சலவை செய்து அதை நம்ப வைத்துள்ளார்.
அவர்களது நோக்கம் தங்களது தந்தையின் ஆன்மாவின் குரலைக் கேட்பதாகவும், கடவுளை அடைவதாகவுமே இருந்திருக்கிறது. அதே நேரம் தங்களில் யாரும் இந்த முயற்சியின் வாயிலாக உயிரை விடக்கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கு கொஞ்சம் கூட இருந்திருக்கவில்லை என்கிறது உளவியல் பிரேதப் பரிசோதனை அறிக்கை. இங்குதான் இதை தற்கொலை என கூறாமல் விபத்து என கூற வருகிறது பிரேத பரிசோதனை அறிக்கை.
தாங்கள் சாகப்போகிறோம் என்பதே தெரியாமல் அவர்கள் மரணம் அடைந்ததால் தான் இதை விபத்து என்று குறிப்பிடுகிறார்கள்.
Discussion about this post